இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
எல்.கே.ஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளுக்கு அரசே செலுத்தி வருகிறது. இந்நிலையில் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் இருபதாம் தேதி வரை 2023 – 2024 ஆண்டுக்கான 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் இருபதாம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு வழங்கவில்லை. இந்நிலையில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை தயாராகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் நிலுவையில் உள்ள கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் 25 சதவீத இலவச கோரிக்கையை தனியார் பள்ளிகளை தொடர்வது பற்றி பரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும் என கூறியுள்ளார்.