அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி அரசாணை தயாரித்து ரூ 18 லட்சம் மோசடி.

கோவை அருகே உள்ள வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ராஜ்குமார் ( வயது 33) இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை படுத்த வருகிறார். இந்நிலையில் ஆஸ்டின் ராஜ்குமார் போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடைக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் ( வயது 43) என்பவர் அறிமுகம் ஆனார். போத்தனூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சக்திவேல் பொதுப்பணித்துறையில் வேலை செய்வதாகவும், பொதுப்பணித்துறை யில் வேலை வாங்கி தருவதாகவும் ஆஸ்டின் ராஜ்குமாரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் தனக்கும் தனது நண்பர் ராபர்ட் என்பவருக்கும் அரசு வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார். இதற்காக ரூ. 18 லட்சத்தை ஆஸ்டின் ராஜ்குமார் சக்திவேலிடம் கொடுத்தார். இந்த நிலையில் அரசு வேலைக்கான உத்தரவு என்று கூறி சக்திவேல் அவரிடம் சீல் வைத்த காக்கி கவரைக் கொடுத்துள்ளார். அந்த கவரை பிரித்துப் பார்த்த போது அரசு உத்தரவுக்கு பதில் வெறும் வெள்ளைப் பேப்பர் மட்டுமே இருந்தது. இது குறித்து சக்திவேலிடம் கேட்டார். அப்போது தவறுதலாக அதை அனுப்பி விட்டதாக அவர் கூறி போலியாக அரசாணை தயாரித்து கொடுத்துள்ளார். ஆனால் அதைக் கொண்டு சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கேட்டபோது அந்த உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆஸ்டின் ராஜ்குமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பெயரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விசாரணை நடத்தி சக்திவேல் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜெய் சித்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.