திருச்சி காவிரி கரையோரத்தில் மதுபோதையில் இருந்தவர்கள் தாக்கி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பத்தை தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கண்பதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார் ரஞ்சித் கண்ணன். அப்போது தனது அத்தை மகனுடன் வீட்டின் அருகே உள்ள கீதாபுரம் படித்துறைக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளார்.
அப்போது அங்கு சிறுவர்கள் உள்ளிட்ட சிலர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அவர்களில் சிலர் வெளியூர்காரனுக்கு இங்கு என்ன வேலை? என கூறி ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்துள்ளார் ரஞ்சித் கண்ணன். அவரை ஹரி சந்தோஷ் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் கண்ணன் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன் குமார், விஜய், சரித்திர பதிவேடு குற்றவாளி சுலிக்கி சுரேஷ் மற்றும் கீதாபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலைச் சம்பவத்துக்கு காரணமான அனைவரின் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக அரசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில் நமது விராலிமலை தொகுதி அன்பு நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரஞ்சித் கண்ணன் ஸ்ரீரங்கம் கீதாபுரம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை மதுபோதையில் வந்த சிலர் வெளியூர் காரனுக்கு இங்கு என்ன வேலை எனக்கூறி கட்டையால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்த கல்லூரி மாணவர் தம்பி ரஞ்சித் கண்ணன் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இந்த மதுபோதை கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 2 சிறுவர்களும் அடங்கியிருப்பது அதிர்ச்சி தரும் வெட்கக்கேடு எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காவிரி கரையோரம் நடந்திருப்பதால் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0