இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!

சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனை வளாகத்தில் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 202 பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5.89 கோடி மதிப்பில் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது. சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ. 5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது. ஃபெர்டிலிட்டி சென்டர் கருத்தரிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக தனியார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையம் அமைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின் பேரில், சென்னை – எழும்பூர் மற்றும் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆயிரத்து 21 மருத்துவர் பணியிடங்களும், 980 மருந்தாளுநர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.