இந்தியாவில் முதல் முறையாக திடக் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் திட்டம் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக திடக் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் திட்டம் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக ‘தி கிரீன் பில்லியன்ஸ்’ நிறுவனம், புணே மாநகராட்சியுடன் 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின்படி அடுத்த ஆண்டில் இருந்து நாள்தோறும் 350 டன் திடக் கழிவுகள் ஆலையில் கையாளப்படும். இதில் இருந்து நாள்தோறும் 10 டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவில் திடக் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இது தொடா்பாக தி கிரீன் பில்லியன்ஸ் நிறுவன அதிபா் பிரதீக் கனாகியா கூறுகையில், ‘ரூ.350 கோடியில் இந்த ஆலை நிறுவப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை இருப்பு வைக்க ரூ.82 கோடியில் சேமிப்பகம் அமைக்கப்படும். ஒரு டன் கழிவை சுத்திகரிக்க புணே மாநகராட்சியில் இருந்து கட்டணமாக ரூ. 347 பெறப்படும்.
நவம்பா் இறுதியில் முதல் 10 டன்களுக்கான சுத்திகரிப்பு மையங்கள் தயாராகிவிடும். அடுத்த ஆண்டில் ஆலை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும். ‘பிளாஸ்மா’ வளிமமாக்கல் தொழில்நுட்பத்தில் இந்த ஆலை செயல்பட இருக்கிறது’ என்றாா். ‘எதிா்காலத்தில் ஹைட்ரஜன் மிகச்சிறந்த எரிபொருளாக உருவெடுக்கும். இதனை மாநகரட்சிக் கழிவுகளில் இருந்தும் பெற முடியும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஏற்கெனவே தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.