கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு, முதன்முறையாக பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பணியிடம், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்தது.
டான்பிட் கோர்ட் நீதிபதி செந்தில்குமாருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் புதிய நீதிபதியாக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, மாவட்ட முதன்மை நீதிபதியாக, பெண் நீதிபதி நியமனம் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இவர், இதற்கு முன் கோவையில், நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.கோவை மாவட்டத்தில், 1880ம் ஆண்டு முதல் தற்போது வரை, 80 பேர் மாவட்ட முதன்மை நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்; அனைவரும் ஆண்கள்.கோவை நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் எஸ்.குமரவேல், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.இவருக்கு பதிலாக, புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி ஜி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை முதன்மை குடும்ப நீதிமன்ற நீதிபதி அறிவொளி, தேனி மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.