தமிழக நிதியமைச்சரின் திட்டத்தினால் முதல்வர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் நீதித்துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். இவர் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு மாநில தணிக்கை குழு என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதாவது இந்திய அரசு துறைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு சிஏஜி என்ற தணிக்கை குழு உள்ளது. இந்த குழுவிற்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வரவு செலவுகளையும் கணக்கீடு செய்வதற்கான அதிகாரங்கள் உண்டு. இந்த அமைப்புகள் தாக்கல் செய்யும் அறிக்கை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட அரசு நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்க்க முடியும். இதில் முறைகேடுகள் நடந்து இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
இந்நிலையில் சிஏஜி போன்ற தணிக்கை குழு தமிழகத்திலும் நியமிக்க வேண்டும் என்பதற்காகவே மாநில தணிக்கை ஜெனரல் குழு என்ற பிரிவை நிதியமைச்சர் உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் ஆடிட்டிங் அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்தப் புதிய பிரிவின் மூலமாக அனைத்து துறைகளின் கணக்கீடுகளையும் ஒரே பிரிவின் கீழ் கொண்டுவந்து ஆடிட்டிங் செய்யலாம். அதாவது நிதியமைச்சரால் ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் வரவு, செலவு கணக்குகள் மற்றும் பற்றாக்குறை போன்றவற்றை தணிக்கை செய்து நிதித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தங்கள் துறைகளின் கீழ் வரும் வரவு செலவு கணக்குகளை முறையாக நிதித்துறைக்கு காட்ட வேண்டும். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மாநில தணிக்கை குழு மூலமாக அனைத்து துறைகளும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்படும். இதன்மூலம் ஊழலை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறையை நிதியமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கண்காணிப்பாளர்கள். மேலும் நிதியமைச்சரின் இந்த புதிய திட்டத்தினால் தமிழக முதல்வர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.