இந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு கேரளாவில் நினைவகம் கட்டப்படும் என அந்த மாநில அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் இசை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். மென்மையான இசையின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.எஸ்.விஸ்வநாதனை மக்கள் ‘மெல்லிசை மன்னர்’ என்றே கொண்டாடி வருகின்றனர்.
இசைத்துறை மட்டும் அல்லாது நடிகராகவும் விளங்கிய எம்.எஸ்.வி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஏராளமான திரை உலகினர் எம்.எஸ்.வி க்கு அஞ்சலி செலுத்தினர். இன்று வரையிலும் எம்.எஸ்.வி மறைந்தாலும் அவரது பாடல்கள் மூலமாக அவர் தினந்தோறும் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், கேரள அரசு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவிடம் கட்ட இருக்கிறது. இதற்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேரளாவை சேர்ந்தவரும் முன்னாள் இந்திய ராஜாங்க அதிகாரியுமான டிபி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,” பழம்பெரும் இசையமைப்பாளர் ஸ்ரீ எம்.எஸ்.விஸ்வநாதனை கேரளா கவுரவிக்கிறது. பாலக்காட்டில் எம்எஸ்வி-க்கு நினைவிடம் கட்டப்படும் என நிதியமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். இதற்காக நடப்பு நிதியாண்டில் 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க கேரள அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது இசை ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.