கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து இ.எஸ்.ஐ மருத்துக் கல்லூரி டீனுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனவும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதை புதுப்பிக்க தவறினால், எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது: 2016-ல் முதல்முறையாக எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 2021-ம் ஆண்டோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அப்போது கரோனா காலம் என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் தற்காலிகமாக அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தேதிய மருத்துவ ஆணைய குழுவினர் இங்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்வையும் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்று இல்லாமல், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையாக செயல்படுவதால் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் நாங்கள் வருகிறோம்.
எனவே, என்.எம்.சி மற்றும் இ.எஸ்.ஐ விதிமுறைகளின்படி இங்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள், கருவிகள் என அனைத்தும் உள்ளன. அதனால்தான் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். மேலும், நாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனைகளிலேயே இங்குதான் பிரேத பரிசோதனை வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.