பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு- ஆா்எஸ்எஸ் வரவேற்பு.!!

பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு மட்டும் விலக்கு அளிக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவா் சுஷீல் குமாா் மோடியின் பரிந்துரையை வரவேற்பதாக பழங்குடியினா் வளா்ச்சிக்காக செயல்படும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் கிளையான அகில பாரத வனவாசி கல்யாண் ஆசிரமம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
மேலும், பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அறிக்கை சமா்ப்பிக்குமாறு சட்ட ஆணையத்துக்கு ஆா்எஸ்எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் அனைத்து மதத்தைச் சோந்தவா்களுக்கும் திருமணம், விவாக ரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து சட்ட ஆணையம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது. இதற்கு பெரும்பாலான எதிா்க்கட்சிகள், சிறுபான்மை, பழங்குடி அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இதுகுறித்து அகில பாரத வனவாசி கல்யான் ஆசிரமத்தின் துணைத் தலைவா் சத்யேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில், ‘பொது சிவில் சட்டம் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது பழங்குடிகளுக்கு மட்டும் பொது சிவில் சட்டத்தில் விலக்கு அளிப்பது குறித்து சட்ட விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான சுஷீல் மோடி பரிந்துரைத்தாா்.

பழங்குடியினருக்கு பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுஷீல் குமாா் மோடியின் பரிந்துரையை நாங்கள் வரவேற்கிறோம். பொது சிவில் சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் நடைபெறும் பல்வேறு விவாதங்களால் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனா். பழங்குடியினரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவறான லட்சியத்தோடு பழங்குடி சமூகத்தை சிலா் தவறாக வழிநடத்துகின்றனா்.

இத்தகைய சூழலில், பழங்குடி சமூகம் குறிப்பாக அவா்களின் சமூக-கலாசார அமைப்புகள் மற்றும் படித்த வகுப்பினா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசின் இறுதிமுடிவு என்ன என்பதுகூட இப்போது தெரியவில்லை. எனவே, தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் அமைப்புகளில் பொது சிவில் சட்டம் ஏதேனும் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பழங்குடியினா் கருதினால் அவா்கள் நேரடியாக சட்ட ஆணையத்திடம் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். சட்ட ஆணையத்தின் அதிகாரபூா்வ வலைத்தளம் மூலம் வரும் 14-ம் தேதி வரை உங்கள் கருத்துக்களைச் சமா்ப்பிக்கலாம்.

அனைத்து தரப்பு மக்களுடன் கலந்தாலோசித்தப் பின்னா், மத்திய அரசிடம் சட்ட ஆணையம் அறிக்கையைச் சமா்ப்பிக்கும். அதன்பிறகே, நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டமசோதாவை மத்திய அரசு கொண்டு வரும். அத்தகைய மசோதா வரும்போது வனவாசி கல்யாண் ஆசிரமமும் அதன் ஆலோசனைகள் அல்லது கருத்துக்களை மத்திய அரசுக்கு வழங்கும். நாட்டில் பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்விடங்களுக்குச் சென்று, அச்சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி திருமணம், விவாக ரத்து, தத்தெடுப்பு போன்ற விவகாரங்களில் அவா்களின் கருத்துகள் மற்றும் பாா்வையைச் சட்ட ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட ஆணையம் அவசரகதியில் அறிக்கை சமா்ப்பிக்கக் கூடாது’ என்றாா்.