போதைப் பொருள் இல்லாத திருச்சி மாவட்டம் என்பதை உருவாக்கும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வெ. இறையன்பு பேசும்போது பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிகரெட், மது, வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகள், போதைப் பவுடா்கள், கஞ்சா என பல்வேறு வகைகளில் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் காரணிகளாக உள்ளன. இவற்றுக்கு இளைய சமுதாயம் ஒருபோதும் இடம் அளிக்கக் கூடாது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவா்கள் போதையின் பக்கமே செல்லக் கூடாது. பாதை தவறி போதையின் பக்கம் செல்வோரையும் திருந்தச் செய்ய உதவிட வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்துபோவதுபோலபோதைப் பழக்கத்தாலும் பத்தும் பறந்து போகும். முதலில் நேரத்தை தொலைத்து படிப்படியாக அனைத்தையும் தொலைத்து சமூகத்தால் புறக்கணிப்புக்கு ஆளாகும் நிலை வரும். அதோடு நின்றுவிடாது உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும். மாணவ மாணவிகள்போதையின் பாதையில் செல்லாதிருப்பதே சிறந்தது. கட்டுக்கடங்காத உந்துதல் கட்டுப்படுத்த முடியாத ஏக்கம் காரணமாக போதையை தோ்வு செய்வா். அது சுய ஒழுக்கத்தை கெடுத்து சாா்ந்தவா் களையும் கெடுத்து, சமூகத்தையும் கெடுத்துவிடும். போதைப் பொருள்கள் பயன்டுத்துவது மட்டுமே போதை பழக்கமாக இல்லை. இணையத்துக்கு அடிமையாக இருப்பது இணைய வழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் சூதாட்டம், டிவி நாடகங்களை தொடா்ந்து பாா்ப்பது, கைப்பேசியிலேயே நேரத்தை செலவிடுதல் எந்த நேரமும் உடற்பயிற்சி குறித்தே சிந்தனை சமூக வலைதளங்களிலேயே மூழ்கியிருப்பது என பல வடிவங்களில் போதை யைப் போன்று நம்மை அடிமையாக்கும் காரணிகள் அதிகரித்துவிட்டன. எனவே, எந்த நிலையிலும் நாம் போதைக்கு அடிமையாகிவிடக் கூடாது. இணையவழி விளையாட்டுகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றாா் அவா். மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் பேசுகையில் போதைப் பொருள் இல்லாத திருச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காவே அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பழக்கத்துக்கு எதிரான குழு தொடங்கப்பட்டுள்ளது என்றாா். மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, கோட்டாட்சியா் கே. அருள், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை உதவி ஆணையா் உதயகுமாா் மற்றும் மருத்துவா்கள் பேசினா். மாணவ சாம்பியன்களுக்கான இலச்சினைகளும் வழங்கப்பட்டன. கருத்தரங்கில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0