அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கக்கூடிய மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்…
ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்துபோய் அதனின் பொன் விழா ஆண்டில் பிளவை நோக்கிச் செல்கிறது என்ற வருத்தத்தில் இருந்ததால் விடுவித்து கொண்டேன்.
யாருடைய சுயநலம் இந்த பிளவிற்கு காரணம் என தெரியும். உட்கட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது, ஒரே வாக்கில் இருவரும் வெற்றி பெற்றனர். பொதுக்குழு தீர்மானம் உருவாக்கும் குழுவில் நானும் இருந்தேன், 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு நான்தான் இரண்டு தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்.
கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் நிறைந்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் உள்ளே வரும்போது நிர்வாகிகளுக்கு பின்னர் அமரவைக்கபட்டிருந்த கூட்டம் செவி கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் பேசினார்கள். ஜனநாயகத்தில் போட்டி வரலாம் அதில் வெற்றிபெற சில யுக்திகள் உள்ளது.
அரைமணி நேரத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் முடிந்தது என்றால் அது இந்த பொதுக்குழு தான், ஒரு பொதுக்குழு நேரலை செய்யப்பட்டது என்றால் அது இந்த பொதுக்குழு கூட்டம்தான். திட்டமிட்டு ஓபிஎஸ் அவர்களை அசிங்கப்படுத்தி உள்ளனர், இவ்வளவு நடந்தும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.
எந்த காலத்திலும் அதிமுகவின் பொதுச் செயலாளரை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேர்வு செய்ய முடியாது என்பது அதிமுகவின் அடிப்படை சட்டம். இன்று இருக்கக்கூடிய பணத்தை வைத்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை வாங்க முடியும்.
ஆனால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அட்டையை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் வழங்கவில்லை. நில அபகரிப்பு போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடைபெற்று வருகிறது.
எந்த தீர்மானம் என்று சொல்லாமலே தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என போடப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகிறதா?
கூவத்துரில் சட்டமன்ற உறுப்பினர்களை டெண்டர் எடுக்கும் வசதி எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது. அதனால் அன்று செங்கோட்டையன் முதல்வர் ஆகவில்லை. அன்று சட்டமன்ற உறுப்பினர்களை டெண்டர் எடுத்த எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களை டெண்டர் எடுக்க தயாராகி உள்ளார். இது ஒரு ஜனநாயக படுகொலை.
அதிமுக என்பதே ஒரு ஜாதி, ஆனால் இன்று ஒரு குழுமனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது. ஜாதி ஜாதியாக செயல்பட துவங்கி இருக்கிறது’ என்றார்.