சூடானின் புளூ நைல் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பல குழுக்களாக வசித்துவருகின்றனர். சமீபகாலமாக அவர்களுக்கு மத்தியில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
கடந்த வாரம் சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு தெற்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாட் அல்-மஹி என்ற பகுதியில் கலவரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும், வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டது, தற்போது அது இனமோதலாக மாறியிருக்கிறது.
மேலும், இந்த நிலத்தகராறு காரணமாக கடந்த இரண்டு நாள்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட மொத்தம் 150 பேர் கொல்லப்பட்ட நிலையில், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக வாட் அல்-மஹி மருத்துவமனையின் தலைவர் அப்பாஸ் மௌசா செய்தியாளர்களிடம்,“இந்த வன்முறையில், புதன்கிழமை முழுவதும் கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. பலருடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 65,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக ஐ.நா தகவல் அளித்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, ஹவுசா இன மக்களுக்கும், பிற குழுக்களுக்கும் இடையே கடந்த ஜூலை மாதமும் கலவரம் நடந்து இருக்கிறது . அந்தக் கலவரத்தில், அக்டோபர் தொடக்கம் வரை சுமார் 149 பேர் பலியானதாகவும், 124 பேர் படுகாயமடைந்ததாகவும் OCHA அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.