2 மாதங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் விற்பனை – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு..!

ந்தியாவில் மாற்று எரிசக்தியை ஊக்கப்படுத்தி, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிப்புக்கான செலவீனங்களை குறைக்க மத்திய அரசு முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, வாகன போக்குவரத்துக்கான பெட்ரோல் பயன்பாட்டில் எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் மத்திய அரசு அறிமுகம் செய்து விற்கவுள்ளது. இதை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் நேற்று பங்கேற்று அமைச்சர் பேசினார். அப்போது, “அவர் நாட்டில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது 2013ஆம் ஆண்டில் வெறும் 0.67 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு மே மாதம் அதை 10 சதவீதமாக உயர்த்தி இலக்கை அடைந்துள்ளது. தற்போது பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம் தீவிரமாக நடைமுறைக்கு வரவுள்ளது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நாடு முழுவதும் எத்தனால் கலந்து பெட்ரோல் அறிமுகம் செய்யப்படும்.

இதற்காக வாகனங்களை flex-fuel என்ஜின் என்ற எத்தனால் பெட்ரோலுக்கு ஏதுவான என்ஜின்களை தரமாற்றம் செய்ய வேண்டும். வாகன உற்பத்தியாளர்களிடம் அரசு இது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி பேசவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனையாகும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் என்பதே அரசின் இலக்கு” என்றுள்ளார்.

பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்ததன் மூலமாக சுமார் ரூ.41,500 கோடி நிதி அரசு சேமித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதன் மூலமாக ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர்களை சேமிக்க முடியும் என்று அரசு எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா தான். எத்தனால் கரும்பில் இருந்து தான் எடுக்கப்படுகிறது என்பதால் நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கும் அரசின் இந்த திட்டம் பயன்தரும் என கூறப்படுகிறது.