ஈரோடு கிழக்கில் போட்டியுமில்லை ஆதரவுமில்லை: தவெக!

ரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என்று பொதுச் செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவித்தது. அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித் துள்ளது. பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது. பின்னர், அதிமுக, தேமுதி கவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீதாலட்சுமி, திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஆகியோர் களத்தில் உள்ளனர். மேலும், வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இவர்கள் இருவரும் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா? இல்லையா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தவெகவின் பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டபேரவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனடிப் படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதை யும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.