ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்த ஸ்டாலின்; கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார்

ரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள் ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து 2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த நிர்வகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரும் உடல்நிலை பாதிப் பால் 2024 ஆம் ஆண்டு உயிரிழந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முறையும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த முறை தி.மு.கவே போட்டியிடும் என்றும் இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாகவும் திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 2016ம் ஆண்டு முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர் பதவியில் இருந்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராகவும் 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் வி.சி.சந்திரகுமார் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப் பாளராகவும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணியிலும் ஈடுபட்டார். வேட்பாளர் அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.சந்திரகுமார், ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளராக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் வி.சி.சந்திரகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்; அரசின் நலத்திட்டங்கள் இடைத்தேர்தலில் வெற்றியை தேடித் தரும் என்றும் கூறினார்.