ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப். 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு திமுக மீதான பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அங்குக் கடந்த ஜன.31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப். 27ஆம் தேதி தேர்தல் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த முறை இங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் காங்கிரஸே அங்குக் களமிறங்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே திமுக அங்குப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. ஆளும் கட்சி என்பதால் இடைத்தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் திமுக எதிர்கொள்கிறது.
திமுக சார்பில் தனியாகத் தேர்தலுக்குக் குழு அமைக்கப்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் கேபி ராமலிங்கம், நாராயணன் திருப்பதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய முயல்வதாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக பென்டிரைவ் ஆவணத்தையும் அவர்கள் ஒப்படைத்தனர். முன்னதாக இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கும் ஒரு கட்சி.. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி என்று விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பணப்பட்டுவாடா செய்ய முயல்வதாக பாஜக அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி விளக்கமளிக்க சத்யபிரதா சாகு ஆணையிட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த விவகாரத்தில் விளக்கம் தரப்படும் எனத் தெரிகிறது.