ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தங்கள் பிரச்சாரத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை , கண்காணிப்பு குழு , நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனை நடைபெற்று வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையிலும் மாவட்ட காவல் துறையில் சார்பில் 35 இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு செக்பாய்ண்டிற்கும் ஒரு காவல் உதவியாளர் தலைமையிலான ஐந்து காவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைத்து மொத்தம் 250 காவல்துறையினர் 35 செக் பாயிண்ட்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட பலர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல் , கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி , போக்குவரத்துக்கு இடையூறு என மூன்று பிரிவுகளில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.