திருச்சியில் லஞ்சம் பெற்ற மின்சார வாரிய அதிகாரி கைது.

திருச்சி, எடமலைப்பட்டி புதூா், ஆா்எம்எஸ் காலனியைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி பிரசாத் (46). இவா் கிராப்பட்டி, அன்புநகா் பிள்ளையாா் கோயில் தெருவில் முகமது அப்துல்லா என்பவருக்காக கட்டப்பட்டும் வீட்டில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுவருகிறாா். அந்த வீட்டின் முன்பகுதியில் உயா் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்தக் கம்பத்தை சற்று தொலைவுக்கு மாற்றி அமைக்குமாறு கிராப்பட்டியில் உள்ள மின்வாரிய உதவி செயற் பொறியாளா்அலுவலகத்தில், வணிக உதவியாளா் அன்பழகன் என்பவரை அணுகியுள்ளாா். அவா் கூறியதன் பேரில், அதற்கான கட்டணமாக ரூ. 35,612 தொகையை இணைய வழியில் ஏப்ரல் 15 ஆம் தேதி செலுத்தி உரிய ரசீதும் ஒப்படைத்துள்ளாா். அதன் பிறகு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பாா்க்க வேண்டுமாறு கூறியுள்ளாா். அதன் பேரில் அந்தோணி திங்கள்கிழமை சென்று அன்பழகனை கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளாா். அதற்கு அந்தப் பணியை முடிக்க ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளாா். ஆனால் அவ்வளவு தொகை தரமுடியாது எனக் கூறப்பட்டதையடுத்து பேரம் பேசப்பட்டு ரூ. 15 ஆயிரம் ஆக தொகை குறைக்கப்பட்டது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் ஆலோசனையின் பேரில் செவ்வாய்க்கிழமை அந்தோணி லஞ்சப்பணத்தை கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன், ஆய்வாளா்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் போலீஸாா் ரொக்கத்துடன் அன்பழகனைக் கைது செய்தனா். தொடா்ந்து அவரது அலுவலகம், வீடு உள்ளிட்டவைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் மின்வாரியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் மின்சார வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.