திருச்சியில் முதல்முறையாக வாக்களித்த ஈழத் தமிழச்சி.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடை பெற்றது. இன்று காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்த நிலையில், மாலை 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. இன்று தேர்தலில் பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், திருச்சியில் முதல்முறையாக இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இருக்கும் பெண் வாக்களித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இருப்பவர் கிருபாகரன். இவரது மனைவி நளினி (38).. இவர்களுக்கு, 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 1986ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு ராமேஸ்வரம் மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமில் நளினி பிறந்துள்ளார். இதனால் அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்கவில்லை.
குடியுரிமை கிடைக்காமல் அகதிகள் முகாமிலேயே தனது இளமைக் காலத்தைக் கழித்த அவர், குடியுரிமைக்காகச் சட்ட போராட்டத்தைக் கடந்த 2021இல் தொடங்கினார். தனக்கு இந்திய பாஸ்போர்ட் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நளினி, இதற்காகத் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், அவருக்கு இந்தியக் குடியுரிமை இல்லை என்று கூறி இந்திய பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சட்ட போராட்டம்: இதையடுத்து தனக்கு பாஸ்போர்ட் வழங்க வலியுறுத்தி அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். நல்வாய்ப்பாக அவரிடம் மண்டபம் பகுதியில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழ் இருந்த நிலையில், அதை வைத்து நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டப்பிரிவு 3இன் படி, 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை 1க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் பிறக்கும் எவர் ஒருவரும் இந்தியக் குடிமகனாவார் என்ற விதியின் கீழ் பாஸ்போர்ட் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், அவர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியின் பேரில் கொட்டப்பட்டு முகாமிலேயே தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ் ஆனந்தக் கண்ணீர்: மேலும், அவர் இந்திய பாஸ்போர்ட்டை ஆதாரமாக வைத்து, வாக்காளர் அடையாள அட்டையையும் விண்ணப்பித்துப் பெற்றுள்ளார். இந்தச் சூழலில் அவர் முதல்முறையாக இன்று திருச்சி மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் வாக்களித்தார். தேர்தலில் அவர் வாக்களிப்பது இதுவே முதல்முறையாம். இதனால் அவர் வாக்களிக்கும் போது ஆனந்த கண்ணீர்விட்டார். அதன் பிறகு பேசிய அவர், “இலங்கையில் வசித்த இந்திய வம்சாவளி தமிழரான எனக்கு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே இந்திய பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையும் கிடைத்தது. மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்தே அவர்களுக்கு வாக்கைச் செலுத்தி இருக்கிறேன். இதுதான் நான் வாக்களித்த முதல் தேர்தல்.. இப்போது தான் நான் இந்தியக் குடிமகனாக உணர்கிறேன்.
அதேநேரம் எனது சட்ட போராட்டம் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. இந்தியாவிலேயே பிறந்த எனது இரண்டு குழந்தைகளுக்கும் சட்டப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இலங்கையில் இருந்து வந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் மட்டுமின்றி, இந்தியாவிலேயே பிறந்த இலங்கைத் தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றார்.