கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கணேச மூர்த்தி போட்டியிட்டு வென்றார். இந்த முறை மதிமுகவுக்கு அவர்கள் கேட்டபடி திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகோ கூறுகையில், திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எங்களுக்கு கிடைத்தது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கடந்த 13 ஆம் தேதி மதிமுக ஆட்சி மன்றக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளின் படி திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். 6 சதவீதம் வாக்கு இருந்தால் சின்னம் கிடைக்கும். ஆனால் நாம் 5.99 சதவீதம் வைத்துள்ளது. பொதுவாக 0.50 க்கு மேல் இருந்தாலே அதை ஒன்று என கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் 6 வருகிறது. இருந்தாலும் பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. கடந்த முறையே புதிய சின்னத்தை எப்படி மக்களிடையே கொண்டு செல்வீர்கள் என திமுக தரப்பு கேட்டதால் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்களுக்கு என தனித்துவம் வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அப்படியே புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை. எளிதாக மக்களிடம் கொண்டு செல்லலாம். ஆனால் துரை வைகோ போட்டியிட்டு சின்னம் இன்னும் உறுதி ஆகவில்லை என்றார் வைகோ. எந்த வாரிசு அரசியலுக்காக திமுகவிலிருந்து , வைகோ பிரிந்து வந்து மதிமுகவை தொடங்கினாரோ அதே வைகோ, தனது கட்சியில் தனது மகனுக்கு பதவி கொடுப்பதாகவே 2021 விமர்சிக்கப்பட்டது. ஆம்! மகன் துரை வைகோவுக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் என்ற பதவியை கொடுத்துள்ளார் வைகோ. இதனால் மதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறினர்.
இது வாரிசு அரசியல் இல்லை, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் எனக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டது, அவ்வளவுதான்” என துரை வைகோ விளக்கினாலும் மூத்தவர்கள் எதிர்த்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி 3 ஆண்டுகள் வெற்றிகரமாக அந்த பதவியில் பயணம் செய்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டே சட்டசபை தேர்தலில் துரை வைகோ களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போல் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது திருச்சி மக்களவை தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். இவரது மேல் உள்ள அதிருப்தியால் கட்சியினர் பணியாற்றுவார்களாவெற்றியை வாரித் தருவார்களா, தற்போது புதிய சின்னத்தில் வேறு போட்டியிட போகிறார். எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0