வெளிநாடுகளில் குடும்பங்களாக குடியேறியதால்.. கேரளாவில் காலியாக உள்ள பங்களாக்கள்- விற்க தயாராக இருந்தும் வாங்க ஆளில்லை.!

கோட்டயம்: கேரளாவின் பல பகுதிகளில் உள்ளவர்கள் கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.

அங்கு நன்கு சம்பாதித்து தங்கள் சொந்த ஊரில் ஆடம்பரமாக பங்களாக்கள் கட்டிவிடுகின்றனர். வயதான காலத்தில் சொந்த ஊரில் சொந்த வீட்டில் வாழ்க்கையை கழிக்க விரும்பியே கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு பங்களாக்களைக் கட்டியுள்ளனர். அப்படி கோட்டயம் மாவட்டம் கைப்புழா கிராமத்தில் கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பங்களாக்கள் தற்போது காலியாகவே உள்ளன.

கைப்புழா கிராமத்தில் பெரும்பாலானோர் கனயா அல்லது ஞான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்களில் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் கடந்த 1950-ம் ஆண்டுகளிலேயே வெளிநாடு செல்ல தொடங்கினர். தற்போது நவீன காலத்தில் அனைத்து பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும் வெளிநாடு சென்று அங்கேயே தங்கி விடுகின்றனர்.

வயதான பெற்றோரையும் தங்களுடன் தங்கிவிட பிள்ளைகள் வற்புறுத்துகின்றனர். மேலும் ஆரோக்கியமாக உள்ள பெற்றோரை தங்களுடன் வைத்துக் கொள்கின்றனர். உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். கைப்புழா கிராமம் மட்டுமன்றி கதுதுருத்தி, உழவூர், கரின்குண்ணம் உட்படபல பகுதிகளில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்கள் சொந்த ஊரில் கட்டிய வீடுகள் காலியாகவே உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது எப்போதாவது வந்து தங்கள் சொந்த பங்களாக்களில் சில நாட்கள் தங்கி விட்டு செல்கின்றனர்.

சில பிள்ளைகள் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற சொந்த பங்களாக்களில் விட்டுவிட்டு செலவுக்கு பணத்தை மட்டும் அனுப்பி விடுகின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதையே விரும்புகின்றனர்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் சில நாட்கள் மட்டும் தங்கும் விடுதி நடத்தி வரும் பிஜு ஆபிரகாம் கூறும்போது, ”இங்குள்ள பல வீடுகளில் வயதான பெற்றோர்தான் தங்கியுள்ளனர். பெரும்பாலான வீடுகள் காலியாகவே உள்ளன. வயதான பெற்றோரும் இறந்துவிட்டால், வீடுகளை பராமரிக்க ஆளில்லை” என்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் கேரளாவில் 10.6 வீடுகள் காலியாக இருப்பது தெரியவந்தது. அதில், 11 லட்சத்து 89,144 வீடுகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 5 லட்சத்து 85,998 வீடுகளும் கிராமப்புறங்களில் 6 லட்சத்து 3,146 வீடுகளும் காலியாக உள்ளன என்று புள்ளிவிவரம் கூறுகிறது. தற்போது கணக்கெடுப்பு நடத்தினால் இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடும். இதற்கிடையில், காலியாக உள்ள பங்களாக்களுக்கு வரி விதிக்க கேரள கம்யூனிஸ்ட் அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு என்ஆர்ஐ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அறிவிப்பை அரசு வாபஸ் பெற்றது.

கும்பநாட் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் வெளிநாட்டில் உள்ளதாக ஹரிதா கர்மா சேனா அமைப்பு தெரிவிக்கிறது. கனயா கத்தோலிக்க காங்கிரஸ் தலைவர் பாபு பி.ஏ. கூறும்போது,”வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை இந்த வேகத்தில் சென்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்குள் கேரளாவில் கனயா கிறிஸ்தவர்கள் யாரும் எஞ்சி இருக்க மாட்டார்கள். பிளஸ் 2 முடித்தவுடன் கல்விக்காக வெளிநாடு சென்று விடுகின்றனர்” என்கிறார். பாபுவின் 3 பிள்ளைகளும் வேறு வேறு நாடுகளில் நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பி.பிரசாத் என்பவர் கூறும்போது, ”வெளிநாடுகளில் குடியேறிய என்ஆர்ஐ.க்கள் பலர் தங்கள் பங்களாக்களை விற்க தயாராக இருக்கின்றனர். ஆனால், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்குதான் ஆட்கள் இல்லை” என்கிறார்.