இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் துபாயின் மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக துபாய் புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் ஒப்பிடும் பொழுது தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நாடாக துபாய் விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக தன்னை அடையாளப்படுத்தி இருக்கக்கூடிய துபாய், சுற்றுலா துறையிலும் மிக முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மிக அதிக அளவில் உயர்ந்து வருகிறது. அதோடு தொழில்துறையிலும் சிறந்து விளங்குதல் உலகின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகவும் மாறி உள்ளது.அதேநேரம் துபாயினுடைய உள்நாட்டு மக்கள் தொகை மிக சொற்பமே, இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு வேலைக்காக செல்பவரினுடைய எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வழக்கம்.
2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் துபாயில் பணியாற்றிய பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி சென்றதால் துபாயினுடைய மக்கள் தொகை மிகப்பெரிய சரிவை கண்டது. மேலும் பல்வேறு பணிகளுக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடும் நிலவியது.இதைத்தொடர்ந்து துபாய் அரசு நாட்டினுடைய பொருளாதார நிலையை வளர்க்கவும், வேலைக்காக துபாய்க்கு வரக்கூடிய மக்களினுடைய வரத்தை அதிகரிக்கவும் துபாய் எக்ஸ்போ 2020 என்ற மிகப் பெரிய நிகழ்வை நடத்தி உலகம் முழுவதிலும் இருந்து அதிக அளவிலான முதலீட்டைப் பெற்றது.
மேலும் “துபாய் விஷன் 2040” என்ற திட்டத்தையும் தொடங்கி நாட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு பணிக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக துபாய் புள்ளியில் மையம் தற்போது கூறியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயின் மக்கள் தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஆறு மாதத்தில் துபாயின் மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்து இருப்பதாகவும், அதிலும் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றவர்களுடைய எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்திருப்பதாகவும் துபாயின் புள்ளியல் மையம் கூறியுள்ளது.