புதுச்சேரியில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் தி.மு.க ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார்.
மேலும், அந்த அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திக்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என். அர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய தமிழிசை, ‘இங்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு கேட்டக்கப்பட்ட 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி கொடுத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இங்கு ஏற்கனவே ஒரு முழுமையான ஒருங்கிணைந்த நிர்வாகம் உள்ளது ‘ என்று கூறினார்.
‘ஸ்டாலினுக்கு புதுச்சேரி மீது ஆர்வம் இருந்தால், விமான நிலைய விரிவாக்கம் செய்ய புதுச்சேரி அரசு பலமுறை கோரிய 300 ஏக்கர் இடத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஸ்டாலினுடனான சந்திப்பின் போதும், இது குறித்து நான் அவரிடம் தெரிவித்தேன். தென் மண்டல முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் தனிப்பட்ட முறையில் நிலம் கேட்டு மனு அளித்தேன்’ என்று கூறினார்.
மேலும், புதுச்சேரியின் உடனடித் தேவை என்பதால் தமிழக முதல்வர் முதலில் விமான நிலையத்துக்கு நிலம் ஒதுக்கட்டும் என்றார். தமிழக எல்லைக்கு அருகில் விமான நிலையம் அமைந்திருப்பதால், விரிவாக்க பணிக்கு தமிழக அரசிடம் நிலம் கேட்டு வருகிறது.
முன்னதாக திங்கள்கிழமை நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், துணை நிலை ஆளுநர் முன்னிலையில் புதுச்சேரி ரங்கசாமி அரசு பொம்மை போல் செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்தார். விமர்சனத்தை தொடர்ந்து பேசிய தமிழிசை, புதுச்சேரியில் அரசின் அனைத்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.