அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்-நிர்மலா சீதாராமன் கண்டனம்..!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம், லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை. அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம். லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.