கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் முன்னதாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகள் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடரும் தெருவிளக்கு மற்றும் பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் நடைபெற்று முடிந்த வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதற்கு உண்டான செலவீணங்கள் குறித்தும் மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என்றும் மன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் பேசும் போது நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் நிறுத்தி வைக்கும் அதிகாரிகள் வாய்மொழியாக பேசாமல் எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும் என்றும் நகர்மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலப் பணிகளை செய்யக்கூடாது என்றால் 21 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களும் திருடர்களா…?
அப்ப நகர் மன்ற தலைவர் எதற்கு…? ஆணையாளர் எதற்கு…? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் எதற்கு…?
நகர் மன்றமே எதற்கு என்று ஆவேசமாக பேசி பல்வேறு கேள்விக்கணைகளை எழுப்பினார் கூட்டமுடிவில் நகராட்சி அலுவலகம் முன்பு கட்டப்பட்டுள்ள புதிய நவீன நிழற்கூரைக்காக கூடுதல் நிதி ஒதுக்கியதை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.