கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம். நோயாளிகள் அவதி

கோவை அரசு மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல், நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதன்ஒருபகுதியாககோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் வலியுறுத்தினர். மருத்துவர்களின் இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவு பாதிப்பின்றி இயங்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.