நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. அதன்படி, எம்.பி.யும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட திமுக குழு இன்று தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.அங்கு தொழிற்துறையினர், மீனவர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற உள்ளனர். இதனை தொடர்ந்து நாளை கன்னியாகுமரி, பிப்.7-ம் தேதி மதுரை, பிப்.8-ம் தேதி தஞ்சை, பிப்.9-ம் தேதி சேலத்தில் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்கவுள்ளனர்.
அதேபோல், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டல மக்களை சந்தித்து அதிமுக குழுவினர் இன்று கருத்துகளை கேட்க உள்ளனர். மேலும் விவசாயிகள் முதல் வெளிநாடு வாழ் தமிழர்கள் வரை தங்கள் கருத்துகளை ஆன்லைன் வழியாகவும், அஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனவும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.