தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ஆய்வு..!

மதுரை மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட  கிராமங்களில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு செய்து தெரிவிக்கையில்;-
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக, வேளான்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டகலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பாக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அந்தவகையில், மதுரை மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் மூலம் மல்லிகை உள்ளிட்ட மலர்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டகலை பயிற்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இதுவரை 14,635 கெக்டர் பரப்பளவில் ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சத்தான காய்கறிகளை வீட்டிலேயே விளைவித்து, அதனை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமாய் வாழ்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எவ்வித இரசாயன பூச்சிகொல்லி மருந்துகளும் உபயோகிக்காமல் விளைவிக்கும் இயற்கை காய்கறிகளின் மதிப்பினை வீட்டுத் தோட்டமானது கண்முன்னே வலியுறுத்துகிறது.
இதனை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத்துறை வீட்டுக்காய்கறித் தோட்ட கிட்டுகளை மானியத்தில் வழங்கி வருகிறது. நடப்பாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மூலம் வீட்டுத்தோட்ட காய்கறித் தோட்டம் அமைக்க, தோட்டக்கலைத்துறை கீழ்கண்ட கூறுகள் அடங்கிய 1000 கிட்டுகளை தலா ரூ.450 மானியத்துடன் வழங்கி வருகிறது. இதில்  தலா 6 கிலோ எடையுள்ள கேக் வடிவிலான தேங்காய் நார் கழிவு கட்டிகள் 2 எண்கள், 6 செடி வளர்ப்புப் பைகள், கத்திரி, வெண்டை, தக்காளி, பீர்க்கங்காய், பாகல் மற்றும் புடலை உள்ளிட்ட ஆறு வகையான காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம் (நுண்ணுயிர் உரம்), 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா,  200  கிராம்   டிரைகோடர்மா  விரிடி,  100 மில்லி வேம்பு பூச்சிக்கொல்லி, தொழில்நுட்ப குறிப்புகள் அடங்கிய பிரசுரம் ஆகியவை கொண்ட கிட்டுகள் ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 தளைகள் வரை வழங்கப்படுகிறது.
அதேபோல செங்குத்து தோட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சமமான தரை பகுதிகள் இல்லாத இடங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக பல அடுக்குகளில் செங்குத்தாக செடிகளை வளர்க்கலாம். சாகுபடி பரப்பு இல்லாத நகர்புற மையங்களில் செங்குத்து தோட்டத்தின் மூலம் சாகுபடி செய்யலாம். செங்குத்து தோட்டம், வெளிப்புற செங்குத்து தோட்டம் மற்றும் உள் அரங்க செங்குத்து தோட்டம் என இரு வகைகள் உள்ளது. சூரிய ஒளியை அதிகம் விரும்பும் மலர்ச்செடிகள் மற்றும் படர்ந்து வளரும் கீரைகள் காய்கறிகள் வெளிப்புற செங்குத்து தோட்டங்களுக்கு ஏற்றது. நிழலை தாங்கி வளரும் அழகுச்செடிகள் உள் அரங்க செங்குத்து தோட்டங்களுக்கு ஏற்றது.
செங்குத்து தோட்டமானது இட அமைப்பு மற்றும் சூழல் அழகை கூட்டுகிறது, ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து கரியமில வாயுவை குறைத்து, காற்றின் தரத்தை உயர்த்துகிறது, நீரினை சேமிப்பதோடு, செடிகளுக்கு நீர் விடுவதும் எளிதாகிறது, ஒளி மற்றும்  ஒலியினை  உட்கவருகிறது  மற்றும்  மன அழுத்தத்திற்கு  மருந்தாகிறது. நடப்பு ஆண்டில் செங்குத்து  தோட்டம்  அமைக்க  மாநில வளர்ச்சி தோட்டக்கலை திட்டத்தின் கீழ் (State Horticulture Development Scheme) 25 எண்கள் 50% மானியத்தில் ரூ.15000/- மானியத்துடன் வழங்கப்படுதிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  சங்கீதா தெரிவித்தார்கள்.