சென்னை : கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு தமிழ்நாடு அணியின் கேப்டன் பதவி வழங்கப்படுள்ளது.
அடுத்து மாநில அளவிலான விஜய் ஹசாரே ட்ராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
அந்த தொடருக்கான அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரை அணியில் சேர்த்ததற்கே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதி அவருக்கு கேப்டன் பதவி வேறு வழங்கப்பட்டுள்ளது மேலும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தினேஷ் கார்த்திக் பல சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்ததால் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிய தினேஷ் கார்த்திக், தோனியின் ஓய்வுக்கு பின் தொடர்ந்து தொடர்களில் வாய்ப்பு பெற்றார். ஆனால், அவரது செயல்பாடு திருப்தி அளிக்காத நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே சமயம், ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக நீண்ட காலம் இருந்தார். தற்போது பெங்களூர் அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால், கடந்த சீசனில் அவர் 12 போட்டிகளில் ஆடி 140 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் அவர் தமிழ்நாடு அணியில் சேர்ந்து சில போட்டிகளில் ஆடி பயிற்சி செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் வர்ணனை செய்து வருகிறார். அவருக்கு தேசிய அளவில் ரசிகர் கூட்டமும் உள்ளது.
அவர் ஐபிஎல் தொடருக்கு பயிற்சி செய்ய வேண்டும் என்றால் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால், அந்த தொடர் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் அதே நேரத்தில் நடந்ததால், தன் வர்ணனை பணியை விட்டு வர விரும்பாத தினேஷ் கார்த்திக் அந்த தொடரில் பங்கேற்கவில்லை.
ஆனால், உலகக்கோப்பை முடிந்த உடன் அடுத்து நடைபெற உள்ள உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே ற்றாபுய் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அதுவும் தமிழ்நாடு அணியின் கேப்டன் பதவியை அவருக்கு கொடுத்து இருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு.
இந்த நிலையில், ரசிகர்கள் பலர் தினேஷ் கார்த்திக் 38 வயதான நிலையில், தமிழ்நாடு அணியில் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் எனக் கூறி வருகின்றனர் அப்படியே அவர் ஐபிஎல் தொடருக்கு தயாராக விரும்பினால் உள்ளூர் டி20 தொடரில் ஆடி இருக்க வேண்டும். உள்ளூர் டி20 தொடர் மற்றும் உள்ளூர் ஒருநாள் தொடர் இரண்டிலும் அவர் ஆடி இருந்தால் கூட பரவாயில்லை. தன் வர்ணனையாளர் பணி பாதிக்கப்படும் என்பதால் டி20 தொடரை விட்டுவிட்டு, ஒருநாள் தொடரில் மட்டும் ஆடுவது சரியில்லை என கூறி வருகின்றனர்.