கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் 50 கோடி 100 கோடி வேண்டும் என்கிறார்கள் திண்டுக்கல் சீனிவாசன்.

திருச்சியில் அ.தி.மு.க., மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் கள ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா ஆகியோருடன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலர்கள் கலந்து கொண்டனர். தெய்வாதீனம்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருந்தார். அந்த சூழலில் தான், தெய்வாதீனமாக பழனிசாமி முதல்வரானார். இல்லையென்றால், தமிழகம் என்ன ஆகி இருக்கும் என்றே தெரியாது. வரும் 2026ல் அ.தி.மு.க.,வை பழனிசாமி அழித்து விடுவார் என, தினகரன் கூறி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் அரசியலில் செல்லாக்காசு ஆகி விட்டனர். அவர்களை அ.தி.மு.க.,வினர் புறம் தள்ள வேண்டும். முதல்வர் பதவிக்குரிய கவுரவத்தையெல்லாம் குறைத்துக் கொண்டு ஸ்டாலின் பேசி வருகிறார். லஞ்சம் – ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சர்வாதிகாரி போல் ஸ்டாலின் நடக்கிறார். கூட்டணி குறித்து யாரும் எதுவும் பொது வெளியில் பேச வேண்டாம்; அதெல்லாம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என பழனிசாமி கூறியுள்ளார். அதனால், நான் கூட்டணி குறித்து அதிகம் பேசுவதில்லை. இருந்தாலும், சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அ.தி.மு.க.,வுடன் கூட்டணியாக வருகிறேன் என்று பேச்சு நடத்தவரும் கட்சிகள், எடுத்ததுமே 20 சீட் வேண்டும் என்று கேட்கின்றனர். கூடவே, 50லிருந்து 100 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு பேரம் பேசுகின்றனர். இவ்வளவு பணத்துக்கெல்லாம் எங்கே செல்வது? ஸ்டாலின் கொள்ளை அடித்து வைத்துள்ளார். அவரைக் கேட்டால், உடனே கொடுப்பார். பணத்துக்காக யார் அங்கு சென்றாலும், ஜெயிக்க முடியாது. பழனிசாமி தான் வெற்றி பெறுவார். வருத்தம் நிருபர்கள் என்னிடம் பேட்டி கேட்டால் கொடுப்பதில்லை. அதற்கு காரணம் பழனிசாமி. பேட்டியில் யாரையாவது திட்டி இருப்பேன். அதற்கு முந்தைய நாள் தான், அவர்களைப் போய் பார்த்து பேசிவிட்டு திரும்பி இருப்பார் பழனிசாமி. என் பேட்டியைப் பார்த்து விட்டு, பழனிசாமியை அழைத்து அவர்கள் வருத்தத்துடன் பேசி உள்ளனர். இது பலமுறை நடந்ததால் இனி நீங்கள் யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என பழனிசாமி தடை போட்டுள்ளார். அதனால், பத்திரிகையாளர்களிடம் நான் பேசுவதில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.கருத்து வேறுபாட்டால் தோல்வி திருச்சி மாவட்ட அ.தி.மு.க.,வில் கோஷ்டிகள் பூசல்கள் நிறைய உள்ளன. ஒருவருக்கு பதவி கொடுத்தால், கிடைக்காதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர். கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லை. இப்படியே போனால், அ.தி.மு.க., எதிர்கட்சியாகத்தான் இருக்கும். வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருக்கும் இறந்தவர்கள் பெயர்களை வைத்து, தி.மு.க., கள்ள ஓட்டுப் போடும். அதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளாலேயே, கடந்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆகவே அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களை விடுவீடாக சந்தித்து வரும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.