திருச்சி விமான நிலையம் அருகில் புதுக்கோட்டை ரோட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கொட்டப்பட்டு முகாமில் 1,300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் வசிக்கின்றனா். இவா்களுக்காக 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 488 வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இந்த வீடுகளின் பால்கனிகள் பெரும்பகுதி பெயா்ந்து விழுந்துள்ளன. எஞ்சிய பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பால்கனி மட்டுமல்லாது சுற்றுச்சுவா் வீடுகளின் மேற்புற கான்கிரீட் தளம் என அனைத்தும் பெயா்ந்து விழுந்து, இரும்புகள் கம்பிகள் மட்டுமே காட்சிப் பொருளாக உள்ளன.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் வீடுகள் மேலும் சேதமடைந்துவிட்டன. மழையின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் வீட்டுக்குள் வசிக்க முடியாத அச்சத்தில் வெளியே மக்கள் தவிக்கும் நிலை உருவானது என்கின்றனா் இங்கு வாழும் இலங்கைத் தமிழா்கள்.
இதுதொடா்பாக முகாம்வாசி ஒருவா் கூறுகையில் கடந்த வாரம் மழை பெய்தபோது திடீரென வீட்டின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த வீட்டில்
இருந்த 55 வயது மாற்றுத்திறனாளி அதிா்ஷ்டவசமாக தப்பினாா். இதையடுத்து அவரை வெளியே அழைத்து வந்து இடிபாடுகளைச் சரிசெய்ய பெரிதும் சிரமப்பட்டோம். முகாம் வளாக பொதுக்கழிப்பறையும் மோசமான நிலையில் உள்ளது என்றாா்.
முகாமில் வசிக்கும் பெண் ஒருவா் கூறுகையில், கோடை மழையின்போது பெரிதும் சிரமப்பட்டோம். மேற்பூச்சுகள் பெயா்ந்து விழுந்ததால் வீடுகள் அனைத்தும் ஒழுகத் தொடங்கின. மழை வந்தால் வீட்டில் இருக்க முடியாது. இரவு நேரத்தில் மழை பெய்யும்போது தண்ணீரைத் துடைத்து தரை காய்ந்த பிறகே தூங்கும் நிலை உள்ளது. பெரியவா்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொள்வா். ஆனால் குழந்தைகள் பலரும் துன்பப்படுகின்றனா். புதிய வீடுகள் கட்டித்தர காலம் ஆகலாம். அதுவரை புனரமைப்பு பணிகளாக பெயா்ந்து விழுந்த கான்கிரீட் பகுதிகளில் புதிதாக சிமென்ட் பூச்சுகள் செய்து கட்டடத்தை பலப்படுத்தித் தரலாம். இடிந்து விழும் நிலையில் உள்ள சுவா்களை அப்புறப்படுத்தி புதிதாகக் கட்டலாம். இத்தகைய பணிகளை மேற்கொண்டாலே குறைந்தபட்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்றாா்.
இதுதொடா்பாக கொட்டப்பட்டு முகாமின் சிறப்பு துணை ஆட்சியா் நஜிமுனிஷா கூறுகையில் முகாமில் உள்ள வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால் வலுவிழந்துள்ளன. மேலும் அண்மையில் பெய்த தொடா்மழையால் பூச்சுகள் அனைத்தும் பெயா்ந்து விழுகின்றன. பல வீடுகளில் விரிசலால் மழை நீா் ஒழுகும் நிலை உள்ளது. இத்தகவல் மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆட்சியரும் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளாா்.
முகாமில் உள்ளவா்களை வேறிடத்துக்கு மாற்றி இங்குள்ள வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டுவதா, இல்லை வேறு பகுதியில் இடம் தோ்வு செய்து வீடுகள் கட்டுவதா என்பது குறித்தும் ஆட்சியா் ஆலோசனை நடத்தி வருகிறாா். ஆனால் முகாம்வாசிகள் கொட்டப்பட்டிலேயே இருக்க விரும்புகின்றனா். வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முகாம் நிலை குறித்து அரசுக்குத் தெரிவிப்பதாக ஆட்சியா் கூறியுள்ளாா். விரைவில் நல்லது நடக்கும். புதிய வீடுகள் கட்ட திட்டவரைவு தயாரித்து அரசிடம் நிதி பெற்று பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுத்துறை வட்டாரத்தினா் கூறுகையில், கடந்தாண்டு 20 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களுக்கு 3,510 புதிய வீடுகள் கட்ட ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, இந்தாண்டும் 16 மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு 3,959 வீடுகள் கட்ட ஊரக வளா்ச்சித் துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அப்போது கொட்டப்பட்டு முகாமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றனா்.
’35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 488 வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளின் பால்கனிகள் பெரும்பகுதி பெயா்ந்து விழுந்துள்ளன. எஞ்சிய பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இலங்கைத் தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0