நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் நேற்று பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். பிரதமர் சிறந்த பேச்சாளர் என்றாலும், சிறப்பு சந்தர்ப்பங்களில் அவர் அணியும் சில ஆடைகளுக்கும் பெயர் பெற்றவர். இந்த ஆண்டு “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” கொண்டாட்டங்களுக்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கோடுகள் மற்றும் வெள்ளை நிற டர்பன் அணிந்திருந்தார். நீல நிற ஜாக்கெட் மற்றும் கருப்பு ஷூவுடன் பாரம்பரிய குர்தா அணிந்திருந்த மோடி, செங்கோட்டையின் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மோடியின் உரை நீடித்தது..
2014 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் பிரகாசமான மற்றும் வண்ணமயமான தலைப்பாகைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது உடை மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.. கடந்த ஆண்டு, சிவப்பு மற்றும் காவி தலைப்பாகை மற்றும் நீல நிற கோட்டை பிரதமர் மோடி அணிந்திருந்தார்..
தனது 8 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது உணர்வுப்பூர்வமான பேச்சுகள் மூலம் மக்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தனித்துவமான உடை மூலம் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரதமர் மோடியின் ஆடைகளில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..