கொள்ளையை தடுக்க ஏடிஎம் மையங்களையும், காவல் நிலையத்தையும் இணைத்து அலாரம் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை..!

னைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களை கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம், தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது. அரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் அபாய சத்தம் ஒலிக்கும். எனவே போலீசார் உடனடியாக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.