ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.நேற்று, கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ண தொடங்கினர். அப்போது உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக சமர்ப்பித்திருந்த காசோலையில் 100 கோடி ரூபாய் என எழுதப்பட்டு இருந்தது. மேலும் வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் அனைவருக்கும் ஆர்வமும், சந்தேகமும் ஏற்பட்டது. இதுகுறித்து உயராதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, அவர்கள் விசாரணை நடத்தினர். அந்த செக்கில் எழுதப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையில், பெத்த பள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை என்பது அது என தெரியவந்தது. மேலும் அவரது சேமிப்புகணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முழுமையான விவரங்களை சேகரிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்..