வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் திடீர் சாவு

கோவை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியகோடி ( வயது 46) பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 10 பேருடன்கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மலை ஏற தொடங்கினர். 1-வது மலை ஏறிய போதுபுண்ணிய கோடி வயிறு வலிக்கிறது என்று கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனால் அவருடன் வந்தவர்கள் அவரை கீழே கொண்டுவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறையை அடுத்த பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறி 9 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.