இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் வந்தது யுவான் வாங் 5..!!

கொழும்பு: சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல்,நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடைந்தது. இக்கப்பல் வரும் 22ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அப்போது, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘இஸ்ரோ’வின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் நம் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான சீன ராணுவத்துக்கு சொந்தமான, ‘யுவான் வாங் 5’ உளவுக் கப்பலை, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கான கப்பலாக 2007ல், அந்நாட்டு ராணுவம் பதிவு செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று தாக்க கூடிய, ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவவும், அதை கண்காணிக்கவும், அது தாக்க வேண்டிய இலக்கை மிக துல்லியமாக திட்டமிட்டு அழிக்கவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கப்பல், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள்களை உளவு பார்க்கும்.

மேலும், கடலின் ஆழம் மற்றும் அந்த பகுதியில் நீர்மூழ்கி கப்பல்களோ, நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களோ செல்ல முடியுமா என்பதையும் ஆய்வு செய்யும் திறன் உடையது. இதுபோன்ற உளவுக் கப்பல் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமும் உள்ளன. சீனாவிடம் இதுபோன்ற ஏழு கப்பல்கள் உள்ளன.தற்போது இலங்கைக்கு வந்த கப்பல், 728 அடி நீளமும், 85 அடி அகலமும் உடையது. சீனாவின், ‘லாங் மார்ச் 5பி’ என்ற ராக்கெட்டை ஏவ, இந்த கப்பல் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது.