டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி… நாளை முதல் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் – சுகாதார துறை உத்தரவு.!

சென்னை : தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நாளை முதல் நாள்தோறும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,”தமிழ்நாட்டில் மழை காரணமாக சில மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் 1000 இடங்களில் நாள்தோறும் இலவச காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் இடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக உரிய சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.