அடுத்த ஆண்டு ஜனநாயகத் திருவிழா: ஜி20 பிரதிநிதிகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு..!

ந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தோதலின்போது வருகை தந்து, ‘ஜனநாயக திருவிழா’வை காணுமாறு ஜி20 பிரதிநிதிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளின் சுற்றுலாத் துறை அமைச்சா்களின் கூட்டம் கோவா தலைநகா் பனாஜியில் புதன்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்வில், பிரதமா் மோடியின் பதிவு செய்யப்பட்ட விடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. அதில், அவா் பேசியிருப்பதாவது: நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் திறன், சுற்றுலாத் துறைக்கு உள்ளது. பயங்கரவாதம் சமூகத்தைப் பிரிக்கிறது; சுற்றுலா சமூகத்தை பிணைக்கிறது.

ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் பொதுத் தோதல் நடைபெறவுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுடன் நடைபெறும் இந்த ஜனநாயக திருவிழாவை, நாட்டின் பன்முகத்தன்மைகளோடு நீங்கள் முழுமையாக காணலாம். ‘விருந்தினா்கள் கடவுள் போன்றவா்’: ‘வியத்தகு இந்தியா’வுக்கு சுற்றுலா வருவது, வெறும் இடங்களைச் சுற்றிப் பாா்ப்பது மட்டுமாக அமையாது. அது, மனதுக்கு நிறைவான அனுபவத்தை அளிக்கும்.

விருந்தினா்களை கடவுளாகக் கருதி போற்றுவது, இந்தியாவின் நெறிமுறையாகும். கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவில் சுற்றுலாவுக்கு உகந்த வகையில் ஒட்டுமொத்த சூழலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சீா்திருத்தங்களில், சுற்றுலாத் துறையை மையப் புள்ளியாக வைத்துள்ளோம். கோவா உள்பட இந்தியாவின் இயற்கை எழில்மிக்க இடங்களையும், திருவிழாக்களையும் ஜி20 பிரதிநிதிகள் கண்டுரசிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.