டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்துவதில் மெகா ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழல் பணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையே கைமாறியதாகவும் புகார் எழுந்தன. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரித்து வரும் நிலையில், முக்கிய புள்ளியாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பாய்ந்தது.
சத்யேந்திர ஜெயின் அமலாகத்துறையினரால் கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகளான கவிதா கவ்வகுந்தலா விசாரணை வலையத்தில் சிக்கியுள்ளார். மதுபான ஊழல் தொடர்பாக டெல்லியில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் அரோரா தனது வாக்குமூலத்தில் சவுத் குரூப் என்ற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளதாக வாக்குமூலம் தந்துள்ளார். இந்த சவுத் குரூப் நிறுவனம் சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா ரெட்டி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமித் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தெலங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா டிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியாகவும் உள்ளார். இந்நிலையில், மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி விசராணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விசாரணையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக தெரிவித்த கவிதா சிபிஐ, அமலாக்கத்துறை என எந்த அமைப்புகள் கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். சமீப காலமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் பாஜகவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சி சார்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை.