அணைகளில் நீர்மட்டம் சரிவு :அணை நீரை குடிநீர், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

கோவையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் அணை நீரை குடிநீர்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தின் நீராதாரங்களாக உள்ள சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளின் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மூலமாக மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்க வேண்டிய மாநகராட்சி, நகரையொட்டிய மற்ற ஊராட்சிப் பகுதிகளுக்கு ஜூன் மாதம் வரை 3.50 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆழியாறு அணையின் மொத்தக் கொள்ளளவான 1,050 அடியில் 988.70 அடி நீர் இருப்பு உள்ளது. இது ஜூன் மாதம் இறுதி வரை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வழங்கிடப் போதுமானதாக உள்ளது. பில்லூர் அணையின் 100 அடி யில் 55.25 அடி உயரம் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால்,குடிநீர் அல்லாத வீட்டு உபயோகங்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ள 2,649 ஆழ் துளைக் கிணறுகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. எனவே, அணைகளில் இருந்து பெறப்படும் நீர்ப்பற்றாக்குறை காரணமாக, அணை நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்துக்கு ஆழ்துளைக் கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.