குஜராத்தில் ஏபிஜி எனும் கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.23 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தது என்பது 2013ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், பிரதமர் மோடி ஆட்சியில் இல்லை என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு லிமிட். இந்தியாவிலேயே கப்பல் கட்டும் நிறுவனங்களில் மிகப்பெரியதாகவும், இதுவரை 160-க்கும் மேற்பட்ட கப்பல்களை கட்டமைத்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஸ்டேட் வங்கி, ஏபிஜி நிறுவனம் மீது வங்கி தொடர்பான புகாரை சிபிஐ அமைப்பிடம் அளித்தது. அந்தபுகாரை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்தப் புகாரில், ஏபிஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை அந்தநிறுவனம் முறைகேடாக அதனுடைய பல்வேறு துணை நிறுவனங்களுக்கு வழங்கியது, கணக்குத்தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. 28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 284 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் பெயரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் ரிசர்வ் வங்கியின் வாரியக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்
அப்போது அவரிடம் குஜராத் கப்பல் நிறுவன வங்கிமோசடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதலில் கூறியது, ” நாட்டிலேயே மிகப்பெரிய ரூ.22,842 கோடி மோசடி என்று சத்தம்போட்டுக்கொண்டு சிலர் வருவார்கள். அவர்களுக்குச் சொல்கிறேன்.
இந்த ஏபிஜி கப்பல் நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டது கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்புதான், அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் ஆட்சியில் இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அப்போதுஇல்லை.
வழக்கமாக இதுபோன்ற வங்கி மோசடியைக் கண்டுபிடிக்க 52முதல் 56 மாதங்களாகும். ஆனால், இந்த மோசடி குறித்து சிபிஐ அமைப்பு விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மோசடியை கண்டுபிடித்ததன் மூலம் வங்கித்துறையில் இருந்த கறைகள் சுத்தம் செய்யப்பட்டுவிட்டதை காட்டுகிறது.
கடந்த 2014ம் ஆண்டிலிருந்தே இந்த வங்கிமோசடி குறித்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்தன. பொதுவாக ஒரு வங்கி மோசடியை முழுமையாகக் கண்டுபிடிக்க 54 மாதங்களாகும். ஆனால், இந்த வழக்கில் அதிக ஈடுபாட்டுடன் வங்கிகள், வங்கிகள் கூட்டமைப்பு உழைத்து ஆதாரங்களைத் திரட்டின. வழக்கமான காலத்தைவிட குறைந்த நாட்களில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. கணக்குத்தணிக்கை குறித்த அனைத்து அறிக்கைகளும கடந்த 2020ம் ஆண்டே சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது, 2022ம் ஆண்டு சில ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சீதாராமன் தெரிவித்தார்.