இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 43 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் நானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த புதன் இரவு இங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முகாம்களில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த பிராந்திய வீரர்கள், தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படை, மணிப்பூர் பிராந்திய வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரையில் 7 வீரர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
நேற்று மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் மண்ணில் புதைந்து, காணாமல் போயுள்ளனர். சம்பவம் நடந்து 2 நாட்களாகி விட்டதால், இவர்களின் கதி என்னவானது என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.