சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 50 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நான்கு கோடி கிலோ அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 உயிர்காக்கும் மருந்து பொருள்கள், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் டன் பால் பவுடர் ஆகியவை முதல்கட்டமாக அனுப்பப்பட உள்ளது.
இதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை தலைமைச் செயலாளர் இறையன்பு நியமித்து பணிகளை தொடங்கிய நிலையில் நாளை சென்னை துறைமுகத்தில் இருந்து மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கொடியசைத்து நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்கிறார்.