அடடா!! பாஸ்போர்ட் வாங்கறது ரொம்பவே ஈஸி.. இனி போலீஸ் ஆட்சேபனையில்லா சான்றிதழை ஆன்லைனிலேயே வாங்கலாம்..!!

டெல்லி: பாஸ்போர்ட் பெற போலீசாரின் ஆட்சேபனையில்லா சான்று தேவைப்படும் நிலையில்லா அதைப் பெறும் நடைமுறையை மத்திய அரசு எளிமைப்படுத்தி உள்ளது.

வெளிநாட்டிற்குச் செல்ல விரும்பும் அனைவருக்கும் பாஸ்போர்ட் கண்டிப்பாகத் தேவை. வெளிநாடுகளில் நாம் இந்தியாவின் குடிமகன் என்பதைக் காட்டும் ஆதாரமாக பாஸ்போர்ட் தான் இருக்கும்.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த சில நாட்களிலேயே சம்மந்தப்பட்ட நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். குற்ற வழக்கு உள்ளிட்ட சில குறிப்பிட்ட விதிமுறைகள் இதில் பின்பற்றப்படும்.

பாஸ்போர்ட் வழங்கும் முறை எளிமையாக இருந்தாலும் கூட, அதை மேலும் எளிமையாக்கும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது. பெரும்பாலானோருக்கு போலீசாரின் ஆட்சேபனையில்லா சான்று பெறுவதில் தான் காலதாமதம் ஏற்படும். அவசரமாக பாஸ்போர்ட் பெற விரும்புவோருக்கு இது தான் சிக்கலாக இருக்கும்.

இந்தச் சூழலில் போலீசாரின் ஆட்சேபனையில்லா சான்று வழங்கும் நடைமுறை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேலும் எளிமையாக்கி உள்ளது. இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் இப்போது தபால் அலுவலகங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் இருந்தே போலீசாரின் ஆட்சேபனையில்லா சான்றுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இந்த போலீசாரின் ஆட்சேபனையில்லா சான்று என்பது பாஸ்போர்ட் பெற நிச்சயம் தேவைப்படும் ஆவணங்களில் ஒன்றாகும். உள்ளூர் காவல்துறை மூலமே இந்த ஆட்சேபனையில்லா சான்று வழங்கப்படும். இருப்பினும், இந்த சான்றை வழங்க அவர்கள் சில காலம் எடுத்துக்கொள்வார்கள். இதனால் பாஸ்போர்ட்டுகளை வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படும். இதன் காரணமாகவே புதிய வசதியை வெளியுறவுத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலீசாரின் தடையில்லா சான்றுக்கான கோரிக்கை அதிகரித்து உள்ள நிலையில், நாளை (செப்டம்பர் 28) முதல் தபால் நிலையங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் இருந்து பிசிசி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இது காலதாமதத்தைக் குறைக்க உதவும்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூலம் பிசிசி-க்கு விண்ணப்பிக்கும் இந்த வசதி என்பது எந்தவொரு நபருக்கும் வெளிநாட்டில் கல்வி அல்லது வேலைவாய்ப்பைப் பெற உதவாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் வழங்கும் சமயத்தில் போலீசின் ஆட்சேபனையில்லா சான்று வழங்கப்படும் நேரத்தைக் குறைக்க மட்டுமே இது உதவும் என்றும் கூறப்பட்டு உள்ளது.