தக்‌ஷிண் விஜய்: என்னோட அடுத்த டார்கெட் தமிழ்நாடு… டிச.8-க்குப் பின் ஆபரேஷன்-ஐ கையில் எடுக்கும் பாஜக..!

சென்னை: தக்‌ஷிண் விஜய் என்ற பெயரில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்பதற்காக ஆபரேஷனை இன்னும் சில நாட்களில் அக்கட்சியின் மேலிடம் தொடங்க உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வைத்திருக்கும் பொதுப்பெயர் ஆபரேஷன் லோட்டஸ். இந்த ஆபரேஷன் தாமரை தமிழ்நாட்டில் அம்மஞ்சல்லி பைசாவுக்கும் இதுவரை கை கொடுக்காவில்லை.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா மட்டும்தான் பாஜக ஆளும் மாநிலம். தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி என்பது இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட சாத்தியமா என்பது தெரியாத ஒன்று. தெலுங்கானா, ஆந்திராவில் ஏதேனும் சிலபல சித்துகளை அரங்கேற்றினால் அங்கே ஆட்சி அதிகாரத்துக்கு அருகே பாஜக செல்லக் கூடும்.

காஷ்மீர் முதல் நாகாலாந்து வரை விரிந்து பரந்து கிடக்கிறது பாஜகவின் சாம்ராஜ்யம். ஆனால் தென்னிந்தியாவில் காலூன்றி நிற்பதற்கே படாதபாடவேண்டிய நிலையில் இருக்கிறது. இத்தனைக்கும் தென்னிந்தியாவில் பாஜகவிம் சித்தாந்த பரமவைரிகளாக நிற்பவை தமிழ்நாடும் கேரளாவும்தான். அதேநேரத்தில் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் பல குடுமிகள், மத்திய விசாரணை ஏஜென்சிகளின் பிடியில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் எதனையுமே சாதிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது பாஜக.

இதனால்தான் தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் அதிகாரத்தை நெருங்குவது; 2032-ல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற நீண்டகால திட்டத்துடன் முழுவீச்சில் களமிறங்கப் போகிறதாம் பாஜக. இந்த ஆபரேஷனுக்கு ஆபரேஷன் லோட்டஸ் என சூட்டவில்லையாம். ஆபரேஷன் தக்‌ஷிண் விஜய் (தென்னகத்தில் வெற்றி).. இதுதான் பாஜக சூட்டியிருக்கும் புதிய ஆபரேஷனுக்கான பெயராம். இந்த ஆபரேஷனுக்கு வெள்ளோட்டமாகத்தான் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலைப் பார்க்கிறதாம் பாஜக.

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் மொத்தம் 129 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது வெறும் 29தான். ஆகையால்தான் தென்னிந்தியாவை கபளீகரம் செய்தே ஆக வேண்டும் என்கிற கோதாவில் குதித்துள்ளதாம் பாஜக. கர்நாடகாவுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. கர்நாடகாவும் தெலுங்கானாவுக்கும் தேர்தல் நடைபெறும். கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கவும் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றவும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது பாஜக.

தமிழகத்தில் ஆளும் திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிட கட்சிகளைத் தாண்டி செல்ல முடியாத நிலையில் இருக்கிறது பாஜக. ஆகையால்தான் அதிமுக எனும் திராவிட கட்சியை அத்தனை அவமானங்கள் ஏற்பட்டாலும் தன்வசமாக்கி தக்க வைத்துக் கொள்வதில் பகீரத பிரயத்தனத்தை தொடர்ந்து செய்கிறது பாஜக. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு சதவீதம் அல்லது வெற்றி சதவீதம் என்பது மிக சொற்பம்தான். இரு கட்சிகளுக்குமே மிக குறைந்தது 30% வாக்குகள் உள்ளன. இப்போதைய நிலையில் பாஜக, இந்த 30% வாக்கு உள்ள அதிமுகவை அவ்வளவு எளிதாக விட்டுவிடப் போவதும் இல்லை.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகள் என்பது பாஜகவில் இலக்கு என சொல்லப்படுகிறது. ஆனால் குறைந்தது 12 அல்லது 10 தமிழக எம்.பிக்களுடன் லோக்சபாவுக்குள் சென்றாக வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிஜமான இலக்காம்.இதுதான் ஆபரேஷன் தக்‌ஷிண் விஜய்யின் ஃபர்ஸ்ட் பேஸாம்- முதல் கட்டமாம். குறிப்பாக தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில்தான் பாஜகவின் கழுகுப் பார்வை முழுவதும் இருக்கிறதாம். பிற மாநிலங்களைப் போல தீவிர இந்துத்துவா, வன்முறைப் பாதையில் இந்துக்கள் வாக்குகள் ஒருங்கிணைப்பு என்கிற வியூகங்களை தமிழ்நாடு தவிடுபொடியாக்கி விடுகிறது. ஆகையால் உறவாடி வாக்குகளை வேட்டையாடுதல் என்கிற பொய்முகத்துடன் களத்துக்கு வரத் திட்டமிட்டு அரங்கேற்றத்தை செய்து வருகிறதாம் பாஜக. இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ந் தேதி முடிவடைந்த உடன் முழுவீச்சில் ஆபரேஷன் தக்‌ஷிண் விஜய் கையில் எடுக்கப்படுமாம். இந்த முறை பாஜகவின் ஆபரேஷனில் எதிர்பாராத ஏராளமான திருப்பங்களுக்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்கிறன டெல்லி தகவல்கள்.