திருச்சியில் குப்பைத் தொட்டியில் குழந்தையின் அழுகுரல்.

திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லை அருகில் உள்ள தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் குப்பை பொறுக்கும் தொழிலாளிகள் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது, அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இருவரும் சென்று பார்த்த போது, அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அருகில் உள்ள இபி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளித்து பிறந்த பச்சிளம் குழந்தையை உடனடியாக முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சைல்ட் லைன் பொறுப்பாளர் பிரியாவிடம் பச்சிளம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் பச்சிளம் ஆண் குழந்தையை ஈவு இரக்கமின்றி குப்பைத் தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பச்சைக் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியது திருச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.