ராமநாதபுரம்: ”தமிழகத்தில் ரவுடிகள், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒழிக்கப்படுவார்கள்,” என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கை, இனி செய்ய வேண்டியது குறித்துஆய்வு கூட்டம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு தலைமையில் நடந்தது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், ராமநாதபுரம் டி.ஜ.ஜி., மயில்வாகனன், எஸ்.பி.,க்கள் கார்த்திக் (ராமநாதபுரம்), செந்தில்குமார் (சிவகங்கை), அதிகாரிகள் பங்கேற்றனர்.சிறப்பாக பணிபுரிந்த இருமாவட்டங்களை சேர்ந்த 59 போலீசாருக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசை டி.ஜி.பி., வழங்கினார்.அவர் கூறியதாவது:முதல்வர் உத்தரவுப்படி ரவுடிகள், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒழிக்கப்படுவார்கள். சரக அளவில் குற்றங்களை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை, இனி எந்த மாதிரிசெயல்பட வேண்டும் என்பது குறித்த ஆய்வு கூட்டம் நடக்கிறது. குறிப்பாக கஞ்சா, குட்கா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். பள்ளி, கல்லுாரி அருகே கண்டிப்பாக போதை பொருட்கள் விற்க கூடாது.ராமநாதபுரம் கடலோர மாவட்டம் என்பதால் கடத்தலை தடுக்க, குறிப்பாக ராமேஸ்வரம் வழியாக கடத்தலை தடுக்க கடலோரப்படையுடன் இணைந்து செயல்படுகிறோம்.
வெளி மாநில, நாட்டு குற்றவாளிகள் கண்காணிக்கப் படுகின்றனர். சமீப காலமாக எந்த சம்பவமும் இல்லை. ‘போக்சோ’ சட்டத்தில் உடனடியாக வழக்குபதிவு செய்வதால் பலஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை கூட தற்போது புகார் அளிக்கின்றனர். அதனையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம், என்றார்.ராமேஸ்வரம் செல்லும் வழியில் உச்சிபுளி போலீஸ் ஸ்டேஷனில் டி.ஜி.பி., கோப்புகளை ஆய்வு செய்தார். சரியாக இருந்ததால் அங்கிருந்த போலீசாரை பாராட்டி அவர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.