பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,800 வரை இருக்கும் என்று வேளாண்மை பல்கலைக் கழகம் கணித்து உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் பருத்திக்கான விலை முன் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நாட்டின் மொத்த இழைப்பயிர் நுகர்வில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பங்களிப்பை வழங்குவதன் மூலம் இந்தியாவில் ஜவுளி தொழிலை பருத்தி நிலை நிறுத்துகிறது.
இந்திய ஜவுளி அமைச்சகத்தின் அறிக்கை படி 2022 – 23 – ம் ஆண்டில் பருத்தி 130.61 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 343.47 லட்சம் பேல்கள் (1 பேல்-170 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில், குஜராத், மராட்டியம், தெலுங்கானா, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருத்தியை அதிக அளவு உற்பத்தி செய்கிறது.
பருத்தி 2022 – 23 – ம் ஆண்டில் 1.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.56 லட்சம் பேல்கள் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், தருமபுரி, அரியலூர், திருச்சி, விருதுநகர், மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பருத்தி அதிகளவு பயிரிடப்படுகின்றது.
மாநிலத்தில் இறவை மற்றும் மானாவாரியில் பருத்தி பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு கிடைத்த விலையின் அடிப்படையில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் இந்தியா முழுவதும் அதிக அளவில் பயிரிட்டனர். அதிக மகசூல் தரக் கூடிய குறுகிய கால ரகங்களை தேர்வு செய்ததன் மூலம் அதிகபட்ச லாபம் ஈட்ட பருத்தி விவசாயிகள் முயன்றதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாட்டின் மேற்கு மண்டல மாநிலங்களில் பருத்தி சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து உள்ளது. நல்ல விலையை எதிர்பார்த்து பருத்தி விவசாயிகள் வைத்து இருந்த கையிருப்பு சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உபரி வரத்து காரணமாக பருத்தி விலை மேலும் சரிந்தது.
கடந்த ஆண்டு உணரப்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக 10 லட்சம் பேல்கள் பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், நடப்பு பருவத்தில் பருத்தியின் விலை உயர வாய்ப்பில்லை. எனவே, கோடை கால பாசன பருத்தியை விவசாயிகள் உடனடியாக விற்கலாம். இந்த சூழலில், விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 26 ஆண்டுகளாக சேலம் பகுதியில் நிலவிய விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், பருத்தியின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது குவிண்டாலுக்கு ரூ.6,500 முதல் ரூ.6,800 வரை இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் மானாவாரி பருத்தியின் விதைப்பு முடிவுகளை எடுத்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.