கோவிட் வழிகாட்டுதல்கள்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ஜனவரி 1 முதல் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு வரும் பயணிகள், அவர்கள் பயணம் செய்வதற்கு முன், மத்திய அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் மாண்டவியா கூறியுள்ளார்.
இந்த ஆர்டிபிசிஆர் சோதனை அனைத்து சர்வதேசப் பயணிகளும் பொருந்தும். சீனா உட்பட மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சுழற்சி முறையில் 2 சதவிகிதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சில நாடுகளில் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இந்தவகை கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. மேலும் மாநிலங்களுக்கும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேசப் பயணிகளுக்கான கோவிட் வழிகாட்டுதல்களை கடுமையாக்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 268 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இன்றைய (டிசம்பர் 29) அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.11 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.17 சதவீதமாகவும் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.